Monday, 18 August 2014

சிறுகதை

 (நல்லோர்களுக்கும் அவர்களுள் ஒருவனான நண்பன் தினேசுக்கும்)


மரமேறி



           அக்னி நட்சத்திரம் அன்றைய தினத்தோடு முடிவுறுவதை முன்னமே அறிந்து வைத்திருந்தனர் கிராமத்தினர். நீண்ட நாட்களாய் போக்கு காட்டி வந்த வானத்தை முறைத்திருந்தது வெடித்த நிலங்கள். அன்றைய பிற்பகல் முழுவதும் சற்று அதிகமாகவேயிருந்த வேக்காடு மழைக்கான அறிகுறிகளை உணர்த்தியது. வேகமானகாற்றின் வருகையும் மெல்லிய தகரத்தை கசக்கினால் வரும் சத்தத்தை போல் இடியும் கூடவே மின்னலும் மக்களை வீட்டினுள் அடையச் செய்தது. அள்ளப்படாமல் கிடந்த குப்பைகள் புழுதியோடு கலந்து வீசியடிக்கப்பட்டது.

     புழுதி படிந்த நிலங்களின் தேகமானது தனக்குள் தேக்கி வைத்திருந்த வெம்மையை தொலைத்துக்கட்டுவதற்கான வாய்ப்பை முதல் துளி வழங்கியது. துளித்துளியாய்ப் பெருகி சீராய் வேகம் எடுக்க துவங்கியிருந்தது கோடை மழை. வீடுகளின் திறந்திருந்த சன்னல்களினூடே சாரல் தெறித்து குளிரைப் பரப்பியது. அது சிவமலையின் வீட்டிற்க்கும் வாய்த்தது.

அந்த வீடு சின்னஞ்சிறிய நடையையும், சிறிய உள் அறை ஒன்றையும் கொண்டிருந்தது. மழை குறித்த பிரக்ஞை ஏதுமின்றி சன்னலோரம் நின்றிருந்தான் சிவமலை. ஆசுவாசமாய் ஒரு சிகரெட்டினை எடுத்து பற்ற வைத்தான்.  சாரலானது அவனது அடர்ந்த தாடியினை சிரமமின்றி கடந்து அவனை வருடியது. அந்த ஸ்பரிசத்தை மழைத்துளி மட்டுமே ஒருதலையாய் ரசித்தது. அவன் உணர்வுகள் கடுந்தவம் பூண்டிருந்தது. குழப்பமுற்ற மனதோடு களைப்புற்று கிடப்பவனின் உணர்வுகளை தூண்ட இத்துளிகள் போதாது, பேய் மழை வேண்டும். பேய் மழை அல்லது சுகந்தி. இரண்டில் ஒன்று.

     சுகந்தியைப்பற்றி பின்னர் கூறுகிறேன். தற்பொழுது அவள் நினைவு வருமாயின் சிகரெட் ருசியினையும் தாண்டி சிவமலையின் நினைவுப்பாதையில் சுகந்தியின் வியர்வை மணமே முன்னிற்கும். அது அவன் வறண்ட உதடுகளின் தாகத்தை அலட்சியப்படுத்துவதாகும்.

     கால்வாசி மட்டுமேயிருந்த சிகரெட்டினை மெல்ல தனக்குள் கரைத்தான். சுகந்தி அருகில் இருந்திருந்தால் கால்வாசி சிகரெட் மீதமிருக்கும் போதே ’மாமா போதும் மாமா கீழ எறி மாமா நீ’ என நச்சரித்திருப்பாள்.

     இருபதுகளின் மத்தியில் இருக்கும் சுகந்தி சிவமலையின் அத்தை மகள். ஒரே சொல், அழகானவள். இன்னும் சில சொற்கள் சேர்த்து சொல்வதாயின்... மலருக்கு மலரோடி மகரந்தச் சேர்க்கை நடத்தும் வண்டுகளுக்கெல்லாம் சுகந்தியின் மேலெழும் கருப்பட்டி நறுமணம் பரிட்சயம். மெல்லிய மனம் கொண்டவள், வேலை செய்து முறுக்கேறிய உடல். நிறைந்த தெப்பமென அலை ததும்பும் பருவத்தின் பரிசுகள். பனை போல் உயரம், நுங்கு சீவும் கத்தி போல் கூரிய பார்வை. கள் குடிக்கும் பனைவோலைக்கோட்டை போன்ற கன்னங்கள்.

   சிறு வயதில் குட்டைப்பனைமரப்பொந்தில் சிவமலையை பாம்பு தீண்டியது, திடுக்கிட்டு புழுதியில் விழுந்தவனை அங்கிருந்த சிலர் அவதிஅவதியாய் தூக்கிக்கொண்டு பாடம் போடுபவரிடம் ஓடினர். சுகந்தி பேரிரைச்சளோடு கதறி அழுதவாறு அங்கேயே நின்றாள், நூற்றிசொச்ச கற்களை பொந்தின் மீது ஆவேசமாய் விட்டெறிந்த பின்னரே தன் பிரியத்திற்குறியவனின் நிலை காண ஓடினாள். சுகந்தியும் சிவமலையும் அடர்ந்த நிறம் கொண்டவர்கள், இதனை அவனிடம் அடிக்கடி சொல்லி வருந்துவதும் அவளுக்கு பிடித்தேயிருந்தது. காரணம் சிவமலை கொடுக்கும் விளக்கம். கருப்பானவர்கள் தான் சுத்தமான திராவிடர்கள் என்றும், அல்லாதவர்களின் மூதாதையரில் எவரேனும் ஆரிய கலப்பு, வெள்ளைக்கார கலப்பு எதேனும் நிகழ்த்தியிருப்பர் என்றும் தான் தி.க கூட்டங்களில் கேட்டிருப்பதாகச் சொல்லி ஓவெனச் சிரிப்பான். சுகந்தியும் தன் நிறத்தை பழிப்பவர்களின் கதை இப்படியானதை நினைத்து கெக்களிபோட்டுச் சிரிப்பாள்.
  
இந்த கோடையின் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்திருந்த இரண்டாம் நாள், திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயில் மலை சுற்று பாதையில் இருக்கும் மலார் குட்டையை தாண்டி கூட்டமாய் நிற்கும் ஒரு பனஞ்சாரியின் நிழலில் நண்பனிடம் வாங்கி வந்திருந்த எக்சல் சூப்பரை நிறுத்திவிட்டு கால் நீட்டி உட்கார்ந்துப் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். ஆங்காங்கே சில பனைகள் கூறுபோட்டு கிடத்தப்பட்டிருந்தன.


-             மாமா போதும் மாமா சிகரெட்ட கீழ எறி மாமா நீ
-             சரிதான்... அப்டீனா கிஸ் ஒன்னு அடிக்கிறியா சொல்லு?!
-    ச்சீக்கருமாந்தறம், அந்த கருமத்த குடிச்சுப்பிட்டு வாய                கிட்டாலகீது   கொண்டாந்தராத! முகம் சுளித்தாள் சுகந்தி.

அவன் மீது தலையை கிடத்தி சாய்ந்தவாரே சிவமலையை பார்த்து உதடு பூத்தாள்.

-           ஏம் மாமா, முன்னெல்லாம் நீ மரமேறி முட்டி கட்டுவீல?

-            ஆமா சுகணி, அல்லக்கயிறெல்லாம் போடாம பொட்டிய மட்டும் கட்டிகிட்டு ஏறிடுவேன். பாதி மரத்துல கை சப்போட்டு இல்லாம காலால புடி போட்டு, நெஞ்ச மரத்தோட பொதச்சு நிப்பேன். மரமே பாத்து தள்ளிவுட்டாதான் உண்டு. மாமங்கூட சொல்லுவாப்புல ‘டே மாப்ள எம்பொண்ண வெச்சு பொழைக்க உனக்கு வூடெல்லாம் வேண்டீதில்லீயிடா, ஒத்த பனமரம் போதும்’னு!. அப்பிடியே உச்சியில இருந்து கீழ பாக்கணுமே! பால்ல எறக்கி கொண்டாறீல அத்தன சனமும் மரத்துங்கீழ நின்னுகிட்டு நமக்காக காத்து கெடக்கும்.  அல்லாரும் அன்னாந்து பாக்கற ஒசரத்தலீல இருப்பன் ?!


-             நான் தான் பாத்திருக்கனே மாமா, நீதான் அதுல டாப்பு!

-   என்னத்த போ, கருமாந்தரம். இப்பமட்டும் அப்டியிருந்தா எந்த மயிராங்கிட்டயும் கை கட்டி நிக்க வேண்டீதில்ல. வா வா’னு அடியா அடிச்சிக்குவானுங்க. மரத்துக்கு இருவதுரூவா, தெளுவு முட்டியாச்சும் கட்டி கருப்பட்டி அடிக்கிறவனுக்கு கொடுத்து ஒரு அமவுண்ட பாத்தரலாம். மத்த நேரம் அங்கிய்யும் இங்கிய்யும் ஏற தென்னமரங்கெடக்குது. போட்டிக்கு ஒருத்தனும் பெருசா கெடையாது. கூட ஆளுக்கு நாலு ஆடு மேச்சா சோறு திங்க முடியாமதான் போயிருதா? கவுருவம் பாத்துகிட்டு எவனெவங்கிட்டியோ ஊட்டு வேலையெல்லாம் செஞ்சிகிட்டு கெடக்கறானுங்க, கேட்டா டைவருனு பெருமையடிக்கிறானுவ! என் சோத்துக்கு நான் ராஜா, என்ன பொருத்த வரைக்கும் மாளாத வேல செய்யனு, வயித்துக்கு கொற வெக்காத வீட்டு சாப்பாடு சாப்படணும், மரியாதையோட பொழைக்கனும் அவ்வளதான்.

 பலமுறை அவளிடம் இதே விளக்கத்தை கொடுத்து                சலித்துப்போயிருந்தான்.

-          சரி மாமா, சரி மாமா டென்சனாவாத, நீ என்ன வேணாலும் பண்ணு.. ஏன் மாமா உங்கூட அந்த பன்னீரு, மாது எல்லாம் இருப்பாங்கள்ள, அவங்களாட்டமெல்லாம் லாரியோட்ட போறதும் உனக்கு புடிக்காதா? சட்டென்று அவன் முகம் வாடியது, இதனைக்கண்ட சுகந்தி மேற்க்கொண்டு எதுவும் பேசவில்லை.

 சுகந்தியின் கேள்வி சிவாவையும் அன்றைக்கு தீண்டப்படவிருந்ததையும் கேலிக்குள்ளாக்கி ஏமாற்றம் கொள்ளச்செய்தது. ஆனால் அந்த கேள்விக்குள் அவளது ஆசையும் இருந்தது. சுகந்தியின் தோழி ஒருத்திக்கு க்ரேன் டிரைவரை மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தனர். தன் அக்காவை ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் கடையில் வேலையிலிருந்த பையனுக்கு அப்பா கட்டி கொடுத்திருக்கிறார். சிவா ஏதேதோ புத்தகங்களை படித்துவிட்டு தனக்கு விருப்பமானதை தான் செய்வேன் என்றும், நடைமுறை தெரியாமலும் பேசுகிறான் என்றும் வீட்டிற்க்கு சென்றபின் வருந்தினாள்.

பெட்டிகடை வரை சென்றிருந்த சிவமலையின் அம்மா மழை நின்றபின் வீடு திரும்பி வந்தார். முன்னர் தான் சேகரித்து வைத்திருந்த  குமிட்டிக்கீரையை கடைந்து குழம்பு வைக்களானார். அப்பன் தங்கையின் வீட்டிற்கு சென்று காலையில் திரும்பி விடுவதாக சொல்லி எடப்பாடி வரை முன்னமே சென்றுவிட்டார்.

-          சிவமல, எந்திருச்சு வா, குமிட்டி கடஞ்சிருக்கேன், திண்ணுப்புட்டு படுத்துகுவியாமா, வா.. என்றார் அம்மா.

சிந்தனை மடை உடைத்து கட்டற்று பாயும் நீர் போல் அங்கும் இங்கும் ஓடியது.. ”இப்படி நம்மாளுவள திக்காலுக்கு ஒருத்தனா ஓடவுட்டது இந்த கெவர்மெண்ட்டுகாரனுவ கள்ளுக்கு போட்ட தட தான?. ஒரு கள்ளுக்கெட வெச்சா எப்பிடியிருக்கும். ஆடு மேக்காம இவள அவங்கப்பன் எப்படி சோறு போட்டு காப்பாத்துனானாமா?
அதென்ன அவ்வள கேவலமா? நம்ம சவுரியத்துக்கு இருந்தா எவனுக்கு எங்க வலிக்குது? அவளச்சொல்லியும் ஒன்னுமில்ல, புருசன் மரமேறினு சொல்லறுதுக்கும் சங்கட்டமாதான இருக்கும். இப்ப சொல்லறவன்தான் வந்து சோத்துக்கு அவுக்கறானாமா? இவக்கிட்ட இதே சனியத்த ஆயிரம் தடவ சொல்லியாச்சு, என்ன வேணும்னாலும் பண்ணுங்கறா, அப்றம் அது புடிக்காதா, இது புடிக்காதாங்கிறா,  இந்த செந்தில் ஆயில் கடைக்கே போய்டுவமா பேசாம? அது செட்டாவாது, வாடா போடாம்பானுங்க, அவனே இவனேம்பானுங்க புடுங்கி மயிறானுவ, மறுவுடியும் மரமேற ஆடர் வந்தா அன்னிக்கு என்னத்தான தேடி வந்தாவனும் இந்த மொதலாளிவோ! லாரியோட்ட போனம்னாலும் ஒழுங்கான சோறு திங்க முடியாது, இன்னம் க்லினீரா ஓடி வண்டி பழவறதுக்கும் வருசமாயிடும், கம்முனு டிப்பர் பழவ போய்டலாமா..”
 -  டே சிவா .பையா சாப்பட வாடா...என்னடா யோசன?என்றார் அம்மா
சீட்டுக்கட்டாய் களைந்து கிடந்த யோசனைகளை புறந்தள்ளி வயிறு கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தான்.  எக்காரணித்திற்காகவும் சாப்பாட்டின் மீது கோபம் கொள்ளாமல் வயிற்றிற்கு மரியாதை கொடுக்க பழகியிருந்தான் சிவமலை.

  காலையில் வருவதாக சொல்லிச்சென்ற அப்பன் எறங்கின நேரமான பின்தான்  திரும்பியிருந்தார். சிவமலை அந்நேரத்திலேயே கட்டில் போட்டிருந்தான். அப்பனுக்கு சிவமலையின் பேரில் கோவம்தான். தன் வலி தன்னோடு போகட்டும் என்றால் இவனும் மரமேறி பிழைக்கிறேன் என்கிறான். ஏறிப்பார்த்தால் தான் அந்த வலி தெரியும்.  இருந்தாலும் சிவமலைக்கு மரமெல்லாம் தண்ணி பட்ட பாடுதான் என்பதையும் அப்பன் நன்றாகவே அறிவார். அதனால் தான் என்னவோ, எவறேனும் சிவமலையை அந்த வேலைக்கு போ, இந்த வேலைக்கு போ என்று அறிவுரைக்கும் போதெல்லாம் - ஏண்டா அவஞ்சோத்துக்கு அவன் சம்பாரிச்சுக்கறான், உன்னத்தான் சோத்துக்கு தேடுனானா?. அப்பன்னாத்தா கால ஆசையா சுத்திகிட்டு நல்ல சோறு திங்கறவன எங்கெங்கடா போயி காயச் சொல்லற?! என்பார்.

  பொழுதிறங்கிய வேளை வானம் கருக்கள் போட்டு கிடந்தது. அப்பன் ஆடுகளை பிடித்து கொட்டகையில் அவராகவே கட்டினார். பொதுவாக சிவமலை ஆட்டு சமாச்சாரத்தையெல்லாம் அவனே பார்த்துக்கொள்வான். அன்று எதன் மீதும் ஈடுபாடற்று கட்டிலில் கிடந்தான். ஆடுகளை பிடித்து கட்டியபின் அவனருகில் வந்து உட்கார்ந்தார் அப்பன், மெல்ல வாய்திறந்தார்

-  
    ஏன்டா சிவமல, பத்து ஆடு வெச்சிருக்க, தென்ன மரமேறீற, டீவீஸுல எளநி கட்டிக்கொண்டோயி விக்கிற, அப்டி இப்படினு மாசமொரு பத்தாயிரம் சம்பாரிச்சுக்குற எல்லாஞ்சரிதான். ஆனா உன் சகல டூல்ஸ் கடைக்கு போறானாமா, பெரிய ஆளுங்களுக்கெல்லாம் கூட அவன அடையாளம் தெரியிதாமா, ஆறாயிரம்தான் வாங்கறானாமா, ஆனா கடைக்குள்ளையே வேலைனு பீத்தறாண்டா பையா. உன் மாமனுக்கும் மரமேறினா கசக்குதாமாப்பா, பவுசு வந்தவனாட்டம் பேசறான். எதாவது கட கன்னிக்கு போனாதான் கண்ணாலம் பண்ணித்தருவேங்கறான்! என்ன சொல்லற நீ? அப்பன் திடீரென போட்டுடைத்தார்.
  
  ஏற்கனவே குழம்பிபோயிருந்தவனை இது ஒன்றும் புதிதாய் குழப்பவில்லை. இப்போதே ஏதேனும் ஒன்று முடிவாகட்டும் என்று அனிச்சையாய் ஒரு குரல் காற்றில் மேவி அவனை வந்தடைந்தது. மிகவும் சுலபமானதொரு தீர்வு அவன் முன்னேயிருந்தது. சுயம் இழத்தல்.

    இது எதிர்பார்த்தவொன்று தான். ஒரு வருடமாகவே பார்ப்பவரெல்லாம் அவனிடம் இதைத்தான் கூறுகிறார்கள். அவனுண்டு அவன் வேலையுண்டு என நிம்மதியாய் இருப்பது ஏதோ விதத்தில் சுற்றத்தாரை உசுப்பியது. முடிந்த மட்டும் முடிவுகளை காலந்தள்ளி வைத்தான், முட்டி மோதினான். இனி அது முடியாதென்று தோன்றியது. பகடைகளாக தன் விருப்பத்திற்குரியவர்கள் மாறத்துவங்கியிருந்தனர். தற்போதைக்கு தோற்றுப்போவதில் தவறில்லையென எண்ணினான், அது அவன் மட்டுமே அறிந்த சூது.

 கட்டிலில் சலனமற்று கிடந்தவன் பேசலானான். குரல் கம்மியது, வார்த்தைகள் போலித்தெளிவோடு அவனிடத்திலிருந்து வந்து விழுந்தது. 

-      நாளைக்கு கம்முனு நான் கோயமுத்தூரே போயிறன். இந்த கதிரேசன் மாதிரி அங்கையே  எதாவொரு வேலைய பாத்துகிறன். வந்தா எப்டியும் ஐயாயிரம் சம்பளத்துலயாவது வேல வாங்கிடலாமுங்கறான். ஆவறது ஆவட்டும். இப்ப என்ன எல்லாரும் அவனவுனுக்கு புடிச்ச வேலையத்தான் செய்யறானுவளா? என்று பொறிந்தான்.

சுவர் பக்கமாய் திரும்பி படுத்து விம்மினான்.  என்றுமில்லா நாளாக அன்று சாப்பிடாமலும் நெடுநேரம் தூங்காமலும் கிடந்தான்.